top of page

நிறுவனர் உரை

அடிப்படையில் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களால் இந்த சமுதாயத்தையும் நாட்டையும் மகத்தானதாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எங்கும் மலிந்திருக்கும் ஊழலாலும், பொறுப்பின்மையாலும், தொலைநோக்கு சிந்தனை இல்லா  தலைமையாலும் நம் நாடெங்கும் மக்களிடையே அவநம்பிக்கை பரவி கிடக்கிறது. கிராமப்புறங்களில் இருக்கும் திறமைசாலிகளால் தங்கள் திறமைகளை வெளிபடுத்த முடிவதில்லை, அவர்களுடைய குரல் மிகவும் பலவீனமாகவும், யாருக்கும் கேட்காமலும் போகின்றது. சரியான திருத்தங்களை செய்யாவிட்டால், அரசாங்கத்தின் நல் எண்ணங்களையும், தலையிட்டையும் தாண்டி இப்பொழுது இருக்கும் வளர்ச்சி விகிதம் செல்வந்தருக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை பெரிதாக்கி, நாட்டுக்கு கிடைத்திருக்கும் ஆதாயம் எல்லாவற்றையும் அழித்துவிடும்போல் இருக்கிறது. ஊழல் என்பது ஒரு வாழ்க்கைமுறை என மக்கள் ஏற்று கொண்டுள்ளதும், அரசியல் தலைமை என்பது  விரும்பத்தகாத பண்புகளைக் கொண்டு  வாழும் முறையென மாறிவிட்டதை  ஒத்துக்கொண்டதும் ஆச்சரியம் அளிக்கிறது.

K.Annamalai_Chief Servant_We The Leaders Foundation

கு. அண்ணாமலை

முதன்மை சேவகர்

என் சமீபத்தித்திய  கதை :

கடந்த 6 மாத காலத்தில், என்னுடைய முந்தைய வேலையின் பரபரப்பு எதுவும் இல்லாமல், என்னை பற்றி நான் அறிந்து கொள்ளவும், நாடு, நகரம், கிராமம் என பல இடங்களுக்கு பயணம் செய்தும், பேச்சுவார்த்தைகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதிலும், என்னை போன்ற கருத்து  உடையவர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதிலும் செலவழித்தேன். நம் எல்லோரிடமும் இருக்கும்  கண்ணியத்தை இந்த பயணத்தின் போது அறிந்து கொண்டேன். எளிமை என்ற கருத்துதான் சாதாரண மனிதனின் தாரக மந்திரமாக இருக்கிறது. உங்களில் பலரிடம் அந்த மந்திரம் செய்யும் ஜாலங்களை கண்டு அதிசயித்தேன். நம்மைச் சுற்றி நடக்கும் ஊழலும், சொல் ஒன்று செயல் வேறு என்றிருக்கும் அரசியல்வாதிகளும், நாம் கட்டிய வரி நமக்கு சிறிது கூட பயன்படாமல் இருப்பதும், மிக முக்கியமாக, மதத்தினாலும் ஏனையபிற வித்யாசங்களாலும் ஒருவருக்கொருவர் குறை சொல்லி கொண்டு பிரிந்து நிற்பதும், நம்முடைய எளிமை எனும் சக்தியை  குலைத்து விட்டது. இதனால் நாம் இந்தியன், தமிழன், கண்ணடிகா  போன்ற அடையாளங்களால்   ஒன்று சேர்வதில்லை. அதற்கு பதிலாக, குறைகாணும் மனப்பாங்குடன், ஊழல் ஒரு வாழ்க்கை முறையென ஏற்று கொண்டு, நம்மை காப்பாற்ற தேவ தூதர்  எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். சற்று உள்நோக்கி பார்த்தால், நாம் அடுத்தவர்களை குறை சொல்வதையே ஒரு வாழ்க்கை முறை என்று கொண்டுவிட்டது ஆச்சரியமாக இருக்கிறது .

 

தொழில்நுட்பமும் பிரிவினைகளும் :​

தொழில்நுட்பம் என்பது தனிப்பட்ட முறையிலும் தொழில் முறையிலும் நமது வாழ்வை எளிமைப்படுத்தி இருந்தாலும், அது பல ஆபத்துக்களைக்  கொண்டு வந்திருக்கிறது. நாம் மனிதன் என்ற உணர்வை விட்டு விலகி, ஒருவரிடம் இருந்து  ஒருவர் பிரிந்து, திசை திரும்பி இருக்கிறோம்.   தீவிர எண்ணங்களே வழக்கமாகி  விட்டது. சமூக ஊடகங்களில் வரும் தகவல்களோ  நம்மை உணர்ச்சிவசபட  வைத்தும், பகுத்தறிவு அற்றவர்களாக இருக்கும்படியும்  பார்த்துக் கொள்கின்றன. நாம் எப்பொழுதும் சேர்ந்து இருந்ததைவிட இப்பொழுது மிகவும் பிரிந்து இருக்கிறோம். மனிததன்மையைவிட்டு விலகி இருக்கிறோம். வரலாறு காணாத அளவிற்கு தொழில்நுட்ப தொடர்பில் இருக்கும் நம்மை, இந்தச் சமூக ஊடகங்கள் ( Whatsapp, Facebook, TikTok, Hello)  மற்றும் மற்றபிற தொழில்நுட்பங்களும் நம்மை ஆதிக்கம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அடிமைப்படுத்தியும் விடுகிறன. இந்த போதையிலிருந்து விலகி சக மனிதனோடு  தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும் .

 

வென்றது எங்கே தோற்றது எங்கே

ஒரு நாடாக , பல விஷயங்களில் நாம் வென்றிருக்கிறோம். பல லட்சம் பேரை ஏழ்மையிலிருந்து வெளியேற்றி, பசி பிணியை அகற்றி, உலகத்தரத்தில் நிறுவனங்களை உருவாக்கி, தலை சிறந்த பல்கலைகழகங்களை நிறுவி, உள்கட்டமைப்பு வசதியை பெருக்கி, முக்கியமாக பொருளாதார முன்னேற்றப் பாதையில் முன் நிற்கிறோம். நம் தலைவர்கள் பல நன்மைகளைச்  செய்திருந்தாலும் கூட,  செய்வதற்கு  பல பணிகள்  இன்னும் உண்டு. குறிப்பாக, மூன்று துறைகளில் நாம் தோற்றிருக்கிறோம் - சுகாதாரம், கல்வி மற்றும் பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் தரம் . இது ஏனென்றால், இவைகளில் ஒருவருடைய செல்வாக்கும், அவர் பிறந்த இடமும்தான் அவருக்கு கிடைக்கும் தரத்தை நிர்ணயிக்கிறன. நன்றாக வளர்ச்சி அடைந்த நாடுகள் இப்பிரச்னைகளை சரி செய்துள்ளன. அந்நாடுகளின் குடிமகன்களுக்கு சமமான, தரமான வாய்ப்புக்களை அந்நாடுகள்  அமைத்து தருகின்றன. தாய் தந்தையர் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்தார்களோ அந்த அளவிற்கே அவர்களுடைய குழந்தையின் வளர்ச்சி என்று முடிவு செய்ய கூடாது. ஒரு ஏழையின் பிள்ளைக்கும் ஒரு தொழிலதிபரின் பிள்ளைக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கும், வளர்வதற்கும் சமமான வாய்ப்புகள் அமைய வேண்டும். இல்லையென்றால் இது ஒருவருடைய கால்களை கட்டி விட்டு அவரை ஓடச்சொல்வதற்கு சமமாகும். என்னைப் பொறுத்தவரையில், இந்த விஷயத்தில், அரசாங்கம் தன் பொறுப்பில் பெரிய அளவில் தவறி விட்டதாகத்தான் நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில், பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் தரத்தை பற்றி பேசாமல் இருப்பதே நம் எல்லோருக்கும் நல்லது என்று நினைக்கிறன். இவர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை. நம்முடைய முயற்சியும், ஈடுபாடும் இதில் ஒன்றாக இல்லை. இத்தலைவர்களோ   பல்வேறு விதமான மனதினை கொண்டவர்களாக இருக்கின்றனர் - சிலர் தவறான வழியில் சேர்த்த சொத்தை பாதுகாக்கவும், சிலர் தவறான வழியில் சொத்தை சேர்பதற்காகவும், வேறு சிலரோ  இவ்விரண்டிற்கும் நடுவிலும்  இருக்கிறார்கள். மாற்றத்தை கொண்டு வர நினைத்தும், தவறான அமைப்பில் மாட்டிக்கொண்ட சில நல்லவர்களும் இங்கு உண்டு. ஏன் இப்படி மாட்டிக்கொண்டோம் என்ற சமுதாய, பொருளாதார ஆய்வு செய்வதை விட ஒரு நல்ல உலகை உருவாக்குவது எப்படி என்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

நம் முன்னேற்ற பாதைபேச்சை  நிறுத்திவிட்டு, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், செயலில் இறங்க வேண்டிய நேரம் இது என்பதே  நம் நோக்கம். நமது நாட்டை மிகப்பெரிய உயரங்களுக்கு நாம் கொண்டு செல்வோம் என்பதில் சிறிதளவேனும் ஐயம் இல்லை. புதிய இந்தியாவின் அபிலாஷைகள் இம்மூன்று இடங்களில் இருப்பதாக நினைக்கிறோம்.

1. திறன் மேம்படுத்துதல் - முதல் கட்டமான வேலை தேடுவதிலிருந்து அடுத்த கட்டமான வேலை உருபைக்குபவராக மாற்றுதல்

அடிப்படை பட்டமோ கடைசி வருடமோ படித்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான ஒரு திட்டம் ஆரம்பிக்க நினைக்கிறோம். உரையாடும் திறன், நுட்ப சிந்தனை திறன் மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம். நம்முடைய முதல் வகுப்பை கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியுடன் சேர்ந்து செய்வோம்.  நம்முடைய பாடத்திட்டத்தை வழங்க, ஒரு வகுப்பறையை மேம்படுத்துவோம். திறன் மேம்பாட்டிற்கு பின்பு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான ஆவண செய்வோம் .

 

2. வளர்ச்சிக்கான உரையாடல்

கிராமப்புறங்களில் இருப்போருக்கு நகரங்களிலிருந்து சிறந்த பேச்சாளர்களை அழைத்து வந்து பேசச் செய்வோம். தேசத்தின் முக்கியமான விஷயங்கள், நல்ல அரசியல் மற்றும் தலைமை, தொகுதி மேம்பாட்டு திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு, சிறந்த எழுத்தாளர்கள், உத்வேகத்திற்கும் சுறுசுறுப்பிற்கும் புதிய சிந்தனைகள் என  பல முக்கியமான விஷயங்களுக்கான  விழிப்புணர்வு பட்டறைககளை ஏற்படுத்துவோம். வருடத்திற்கு இருமுறையென கரூர், கோவை மற்றும் மங்களூரில் இவை நடக்கும் .

 

3. இயற்கை வேளாண்மை , சுயசார்பு , வளர்ச்சிக்கான மாற்று முறை

நாகரிகத்தின் தொட்டிலாக இருந்த கிராமங்கள் இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக நகரம் நோக்கி புலம் பெயர்வதால் நரகங்களாக மாறி வருகின்றன. "இந்தியா கிராமங்களில் உள்ளது" என்று மகாத்மா காந்தியின் கூற்று மாறி "இந்திய கிராமங்கள் வானம் பார்த்து வாழ்கின்றன" என்பதே சரியாகும். பொறுப்பற்ற கொள்கைகளாலும், மேலை நாடுகளை அப்பட்டமாக நகல் எடுப்பது போன்று வாழ்வதாலும் இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். இந்திய வாழ்வியல் முறை நோக்கி, தேவை மற்றும் விருப்பத்தின் வித்தியாசத்தை உணர்த்தி, மக்களை இயற்கை விவசாயத்தை நோக்கி திருப்ப விழைகிறோம். முறையே  உரையாடல் - பரிசோதனை - ஊக்குவித்தல் - நிதி அமைத்தல் என்ற வழிமுறையில் இது செல்லும். பார்ப்பதற்கு கடினமாக இருக்கும் இந்த பிரச்சனையை நாங்கள் சரி செய்வோம்.

 

நற்சிந்தனையே நல்வழிக்கு நல்ல வித்து.

 

வாருங்கள், துணிவுடன் செயலாற்றுவோம் .

 

கு. அண்ணாமலை

முதன்மை சேவகர்

வீ தி லீடர்ஸ்

bottom of page